மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரிப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் டெல்லியில் அன்றாடம் பதிவாகும் புது நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
இதேபோல் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' இணையத்தளச் செய்தி தெரிவிக்கிறது.
டெல்லியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் அங்கு 24,149 பேர் புதிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 351 பேர் மாண்டுவிட்டதை அடுத்து ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 98 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள மருத்துவ மனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாததால் மாற்று ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது. டெல்லி ராம்லீலா திடலில் 1,000 படுக்கைகள் கொண்ட கொரோனா அவசர சிகிச்சை மையத்தை அமைக்க உள்ளது டெல்லி அரசு. அத்திடலில் ஏற்கெனவே 200 படுக்கைகள் கொண்ட அவசரப் பிரிவு செயல்படுகிறது.
எதிர்வரும் மே 10ஆம் தேதிக்குள் அனைத்து படுக்கைகளும் தயாராகிவிடும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா நிலவரம்
இதற்கிடையே மகாராஷ்டிராவில் அன்றாடம் பதிவாகும் பாதிப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை 48,700 ஆக இருந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 66,358ஆக கூடிவிட்டது. மும்பையில் புதிதாக 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 59 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்குப் பலியான 22 பேரின் உடல்கள் ஒரே ஆம்புலன்சில் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீத் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரி மருத்துவமனையில் இந்த உயிரிழந்த 22 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் போதுமான ஆம்புலன்சுகள் இல்லாததால் உயிரிழந்த 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் கொண்டு செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா நிலவரம்
இதற்கிடையே கர்நாடகாவின் கோலார் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 8 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
அம்மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து எட்டு நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர்.
இதேபோன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்திலும் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் இல்லாததால் 7 நோயாளிகள் பலியாகினர்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்காக 1,100 பேர் கொண்ட உதவி மையம் ஒன்றை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நாள்தோறும் புதிதாக 30 ஆயிரம் பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தலைநகர் பெங்களூருவில் நிலைமை மோசமாக உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 20 கோடி ரூபாய் செலவில் உதவி மையம் ஒன்றை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அங்கு ஏற்கெனவே 400 பேர் பணியாற்றும் உதவி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
மேலும் பெங்களூருவில் மூவாயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

