புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்புவதை இந்தியா நிறுத்தியுள்ளது. இதையடுத்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை உலகளவில் சந்தைப்படுத்த சீனா முனைப்புக் காட்டி வருவதாக 'எகனாமிக் டைம்ஸ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பங்ளா தேஷ், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து உள்நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் தடுப்பூசிகளைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்பு வாக்களித்தபடி தங்களுக்கு இந்தியா தடுப்பூசிகளை அனுப்பவில்லை என பங்ளாதேஷ் கூறியுள்ளது.
டாக்காவில் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமென், தடுப்பூசிகள் குறித்து இந்தியாவிடமிருந்து உரிய பதில் வரவில்லை என்றார்.
"எப்போது கேட்டாலும் காத்திருங்கள் என்று மட்டுமே இந்தியத் தரப்பில் சொல்லப்படுகிறது. எனவே, தடுப்பூசிகளை அனுப்புமாறு சீனாவிடம் வலியுறுத்தி உள்ளோம்.
"அங்கிருந்து சாதகமான பதில் வந்துள்ள போதிலும், எப்போது தடுப்பூசிகள் வரும் என்பதற்கான கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை," என்றார் அப்துல் மோமென்.
ரஷ்ய தடுப்பூசிகளை அவசரகாலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த பங்ளாதேஷ் அரசு அனுமதி அளித்துள்ளது.
அடுத்த மாத துவக்கத்தில் அவை வந்து சேர்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அப்துல் மோமென் கூறினார்.

