புதுடெல்லி: இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் விநியோகச் சங்கிலி மீட்டெடுப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்படுவது என முடிவாகி உள்ளதாக 'ப்ளூம் பர்க்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோ- பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட இணக்கம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய அமைச்சர் டான் டெஹான், ஜப்பானிய அமைச்சர் ஹிரோஷி கஜியாமா ஆகிய மூவரும் காணொளி வழி நடைபெற்ற சந்திப்பின்போது இதுகுறித்து விவாதித்தனர்.
இதையடுத்து விநியோகச் சங்கிலி மீட்டெடுப்பு நடவடிக்கை தொடர்பில் தங்களது அமைச்சு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பது என்றும் இம்முடிவைச் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வது என்றும் முடிவாகி இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு, வர்த்தக விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
தடையற்ற வர்த்தகத்துக்கு வித்திடும் விநியோகச் சங்கிலித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது என மூன்று நாடுகளும் முடிவு செய்துள்ளதாக 'ப்ளூம் பர்க்' இணையத்தளம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது.
பல்வேறு காரணங்களால் சில வர்த்தகத் தொடர்புகள், விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய கிருமித் தொற்றுப் பரவலானது உலகளவிலும் வட்டார அளவிலும் உள்ள தடையற்ற வர்த்தகம் தொடர்பிலான பாதிப்புகளை வெளிப்படுத்தி உள்ளதாகவும் ஆஸ்திரேலிய வர்த்தக விவகாரங்களுக்கான துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதில், சீனா என்று நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும், இது சீனாவுக்கு எதிரான கூட்டணி என்பதை மூன்று நாடுகளும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.

