புதுடெல்லி: கிருமித்தொற்றுப் பாதிப்பு அதிகரிப்பால் பல பிரச்சினைகள், சிக்கல்கள் உருவாகும்போது அதை மௌனமாக வேடிக்கை பார்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
இதையடுத்து இந்த தட்டுப்பாடு குறித்து ஆறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் வி்சாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பாட் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடைபெற்ற வாதங்களின் முடிவில், மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் சிறந்த நிலையில் செயல்படுவதாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
"வழக்குகளையும் தங்கள் எல்லைக்கு உட்பட்டு கொரோனா சூழலையும் உயர் நீதிமன்றங்கள் சிறப்பாகக் கண்காணிக்கின்றன. இதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு துணையாக இருப்பது மட்டும்தான்.
"வட்டார எல்லைகளை மீறிச் சில செயல்பாடுகள் இருப்பதால் எங்கள் தலையீட்டைச் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தலையீடு என்பது சில தேசிய விவகாரங்களிலும், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல் ஏற்படும்போது மட்டும்தான் இருக்கும்.
"எல்லைகள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும்போது உயர் நீதிமன்றங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் நாங்கள் உதவுவோம்," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாக தினத்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

