மூன்று கைதிகள் தப்பியோட்டம்
லூதியானா: ஊரடங்கின்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா மத்திய சிறையிலிருந்து மூன்று கைதிகள் தப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர் இங்கிலாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் என்றும் மூவருக்கும் வலை வீசப் பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இங்கிலாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஷெர் சிங் 22 ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற இரு கைதிகளும் பஞ்சாபைச் சேர்ந்தவர்களாவர்.
எட்டு பயங்கரவாதிகள் மீது புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல்
லூதியானா: பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிய பல்விந்தர் சிங் சந்துவை படுகொலை செய்த வழக்கில் எட்டு பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பல்விந்தர் சிங் சந்துவுக்கு மத்திய அரசு 'சௌரிய சக்ரா' விருது அளித்து கௌரப்படுத்தி உள்ளது. கடந்தாண்டு வீட்டில் இருந்த அவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து எட்டு பேர் மீது தேசிய புலனாய்வு முகைமை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பல்விந்தர் சிங் சந்து செயல்பட்டதாகவும் அதுவே அவர் படுகொலை செய்யப்பட முக்கியக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்த பெண் அதிகாரி பணி நீக்கம்
மும்பை: தமக்கு மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்து காவல்துறை பணியில் சேர்ந்த பெண் அதிகாரி அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுவாதி என்ற அந்தப் பெண் அதிகாரி கடந்த 2012ஆம் ஆண்டு சிறைத்துறைப் பணியில் சேர்ந்தார். அம்மாநிலத்தில் பின்பற்றப்படும் விதிமுறைகளின்படி இரு குழந்தைகள் இருப்போர் மட்டுமே அரசுப் பணியில் சேரமுடியும். ஆனால் சுவாதி மூன்று குழந்தைகளின் தாய் ஆவார். அவர் இந்த உண்மையை மறைத்தது அண்மையில் தெரியவந்தது.
மருத்துவர்களுக்கு இலவச பயணம்
புதுடெல்லி: அரசு மருத்துவர்களும் தாதியரும் பணி நிமித்தம் பயணம் மேற்கொள்ள தங்கள் விமானச் சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம் என விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவர்களும் தாதியரும் நாட்டுக்காகத் தன்னலமின்றி சேவையாற்றி வருவதால் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த இலவசப் பயணத் திட்டம் அறிவிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய விமானப் போக்கு வரத்துத் துறைக்கு அந்நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

