புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3,000 பேர் திடீரென தலைமறைவாகிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர். அசோக், தலைமறைவானவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது என்று குறிப்பிட்டதாக 'தினத்தந்தி' செய்தி தெரிவிக்கிறது.
"தொற்று உறுதி செய்யப்பட்ட மூவாயிரம் பேரில் பலர் தங்களின் கைபேசியை அணைத்து வைத்துள்ளனர். பரிசோதனை முடிவுகளை கைபேசி குறுந்தகவல்கள் மூலம் பெற்றவர்கள் சிகிச்சை பெற முன்வருவதில்லை.
"தற்போது நிலவும் சூழ்நிலையில் காவல்துறை மூலம் நூற்றுக்கணக்கானோரைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினம்," என்று அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்தார்.
இவ்வாறு தலைமறைவாகிறவர்கள் தங்கள் உடல்நிலை மோசமடையும்போதுதான் மீண்டும் தொடர்புகொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு நடந்துகொண்டால் சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடும் என்றார்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் நிலைமை மோசமடைந்துள்ளது. அம்மாநிலத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 985 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகிவிட்டனர். இதனால் மயானங்கள் பிணக்குவியல்களால் நிரம்பி வழிவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
புதன்கிழமை ஒரே நாளில் புதிதாக மேலும் 63 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியுள்ளது என்றும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 67,214 என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பையில் நேற்று முன்தினம் மேலும் 4,926 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 78 பேர் பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் கார்கேரிக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் 'கொவிட்-19' நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், மதுக்கடைகள், சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. அவசரத் தேவையை முன்னிட்டு 10 மில்லியன் தடுப்பூசிகள் வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அங்கு அண்மைய சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

