புனே: கொரோனா தடுப்பூசியின் விலையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்திய சீரம் நிறுவனம் தனது தடுப்பூசியின் விலையைக் குறைத்துள்ளது என 'தி ஹிந்து' நாளேடு தெரிவித்துள்ளது.
இந்திய சீரம் நிறுவனம் மில்லியன் கணக்கில் தடுப்பூசிகளைத் தயாரித்து வருகிறது. மத்திய அரசின் தடுப்பூசித் திட்டத்துக்கு, ஓர் ஊசி 150 ரூபாய் என்ற விலையில் வழங்கி வரும் சீரம் நிறுவனம் தனியார் மருத்துவமனைகளுக்கு 250 ரூபாய் என்ற விலையில் தடுப்பூசிகளை விற்கிறது.
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி தடுப்பூசியின் விலையை திடீரென அதிகரித்தது சீரம் நிறுவனம். மாநிலங்களுக்கு ஒரு தடுப்பூசி 400 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும் என்றும் தனியார் மருத்துவமனைகள் ஒரு தடுப்பூசிக்கு 600 ரூபாய் வழங்கவேண்டி இருக்கும் என்றும் சீரம் நிறுவனம் அறிவித்தது.
இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தடுப்பூசிகளுக்காக மக்கள் அதிகளவு பணத்தைச் செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய அரசு மக்களை ஆட்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கான தடுப்பூசிகளின் விலையை 300 ரூபாயாகக் குறைத்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

