மும்பை: மும்பை, பெங்களூரு, டெல்லி உட்பட பல நகரங்களில் மயானங்களில் எரியூட்டப்பட ஏராளமான சடலங்கள் காத்துக்கிடப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் உள்ள மயானத்தில் பணியாற்றும் சயத் முனிர் கம்ருதீன் தினமும் 24 மணிநேரமும் சடலங்கள் வந்தவண்ணம் இருப்பதாகச் சொல்கிறார்.
கொரோனா தொற்று குறித்து தாம் அச்சப்படவில்லை என்று அவர் கூறியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பெங்களூருவில் உள்ள 13 மின் மயானங்களிலும் தினமும் 24 மணி நேரமும் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. மயானத்தின் முன்பு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
'கொவிட்-19'க்குப் பலியானவர்களின் உடல்களைத் தகனம் செய்ய உறவினர்கள் இரண்டு நாள்கள் வரை காத்திருக்க வேண்டியிருப்பதாக 'தினத்தந்தி' இணையத்தளச் செய்தி தெரிவிக்கிறது.
பெங்களூரு சாம்ராஜ் பேட்டையில் உள்ள மின்மயானத்தில் உடல்கள் தொடர்ந்து எரியூட்டப்படுவதால் மயானத்துக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பிணவாடை அடிப்பதால் வீடுகளில் இருக்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியிலும் மயானங்களில் சடலங்கள் வரிசையாக கிடத்தப்பட்டு பல மணிநேரங்களுக்குப் பிறகு எரியூட்டப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

