பெங்களூரு: வீடுகளுக்கு அடையாளக் குறியீடு வைத்து கொள்ளையடித்த மூன்று பேர் கொண்ட கும்பலை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக 'தினமலர்' நாளேடு தெரிவித்துள்ளது.
வாசலில் கோலம் இல்லாத வீடுகள், வீட்டின் முன் நாளிதழ் கிடப்பது, குப்பை பெருக்காத வீடுகள் என்று பல்வேறு அடையாளக் குறியீடுகளைக் கொள்ளையர்கள் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த 24 வயதான சப்பாத்தி, 22 வயதான யஷ்வந்த், 29 வயதான மோகன்குமார் ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து திருடி வந்துள்ளனர். பகல் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரியும் இவர்கள் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிடுவது வழக்கம். அச்சமயம் எந்த வீடுகளில் இரவு நேரத்தில் புகுந்து கொள்ளையடிக்கலாம் என்பதை முடிவு செய்து, அதற்கு சில குறியீடுகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
குப்பை பெருக்காத வீடுகள், கோலம் போடப்படாத வீடுகளை ஒன்றிரண்டு நாட்கள் நோட்டமிட்ட பின்னர் அந்த வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது முடிவாகும். இரவு நேரத்தில் வீடு மாறிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே மூவரும் இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அண்மைய சில வாரங்களாக பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் மூவரும் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இந்நிலையில் பெங்களூரு போலிசாரிடம் நேற்று முன்தினம் மூவரும் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து 44.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளையடித்த பணத்தில் கோவா சென்று உல்லாசமாக இருந்ததாக மூவரும் தெரிவித்துள்ளனர்.