'ஐபிஎல்' போட்டிகளை நிறுத்த தேவையில்லை என்கிறார் கமின்ஸ்
புதுடெல்லி: கிருமித்தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நிறுத்தவேண்டிய அவசியம் இல்லையென கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் பேட் கமின்ஸ் கூறி உள்ளார். தற்போது உள்ள பிரச்சினைக்கு ஐபிஎல் போட்டி களை நிறுத்துவது சரியான தீர்வல்ல என்று அவர் கூறியுள்ளார். "ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் சுமார் 3 அல்லது 4 மணி நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கிரிக்கெட்டை ரசிப்பதன் மூலம் பலருக்கு மனச்சோர்வு குறைகிறது. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அமைந்துள்ளது," என்று பேட் கமின்ஸ் கூறியுள்ளார்.
'பைதான்' ஏவுகணையை 'தேஜஸ்' போர் விமானம் சுமந்து செல்ல அனுமதி
பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களில் 'பைதான்-5' ஏவுகணையை எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பரிசோதனை கோவாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. வானில் வேகமாக நகர்ந்த இலக்குகளை தேஜஸ் விமானத் தில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கின. இந்தப் பரிசோதனை 100 விழுக்காடு வெற்றி அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு கட்டங்களாக நடந்து முடிந்தது மேற்கு வங்கத் தேர்தல்
கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 8வது, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதையடுத்து வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நேற்று 35 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 8.4 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 11,860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி தொடங்கி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 35 தொகுதிகளில் மொத்தம் 283 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

