செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6791e727-021f-4629-8c38-37c45bab1800
-

கொவிட்-19: சட்ட நிபுணரும் பலி

புதுடெல்லி: இந்தியாவின் தலைமைச் சட்ட அதிகாரியாக இருந்தவர் சோலி சொராப்ஜி. மூத்த வழக்கறிஞரான இவருக்கு வயது வயது 91. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் பெற்ற பெருமைக்குரியவர். கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

போலி மருந்து தயாரித்தோர் கைது

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கு மத்தியில், வட மாநிலங்களில் போலி மருந்துகளும் நடமாட தொடங்கியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டெல்லி குற்றப் பிரிவு போலீசார் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார், கோட்வாரில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோத மருந்து தயாரிப்பு மையம் செயல்பட்டதைக் கண்டறிந்த போலிசார், போலியாக ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ஒரு ரெம்டெசிவிர் மருந்து குப்பியை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் மேலும் 38,607 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி தேர்தல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என மக்களைக் கேட்டுக்கொண்டார். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்துவிதமான பணிகளும் நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் புதிய ஆக்சிஜன் ஆலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக, கிருமிப் பரவலைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் மே 4 முதல் மே 9 வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஒரே தகனமேடையில் 4 உடல்கள்

மும்பை: தொற்றால் தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 24 மணிநேரமும் உடல்களை எரியூட்டு

வதற்காக சடலங்களை வரிசையில் வைத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் கராத் நகரிலுள்ள ஒரு மயானத்தில் 4 சடலங்களை ஒரே தகன மேடையில் வைத்து எரித்துள்ளனர்.