புதுடெல்லி: கிருமித்தொற்று இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்க ராணுவத்தின் சி-5எம் சூப்பர் கேலக்ஸி விமானம் நேற்றுக் காலை புதுடெல்லி வந்து சேர்ந்தது.
பல்வேறு நிவாரணப் பொருட்கள், மருத்துவக் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் 2வது விமானமும் கலிஃபோர்னியாவிலிருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டுள்ளது.
மே 3ம் தேதிக்குள் அமெரிக்கா சார்பில் 3 விமானங்கள் நிறைய நிவாரணப் பொருட்கள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் சி-5எம் சூப்பர் கேலக்ஸி விமானத்தில் 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள், கலிஃபோர்னியா அரசு நன்கொடையாக அளித்த மருத்துவ சாதனங்கள், 9.60 லட்சம் அதிவிரைவு பரிசோதனைக் கருவிகள், ஒரு லட்சம் என்95 முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

