தொற்றைக் கட்டுப்படுத்த உ.பி. திணறல்
லக்னோ: உத்தரப்பிரதேச அரசு நகர்ப்புறங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்படுகிறது, கிராமப்புறங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதும், பரிசோதனைகளை நடத்துவதும் கடினமாக உள்ளது என்று அம்மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் சாடியுள்ளார். "கொரோனா முதல் அலையின்போது உத்தரப்பிரதேசத்தின் கிராமங்களுக்குத் தொற்று அதிகமாகப் பரவவில்லை. ஆனால், 2வது அலையில் அதிகமாகப் பரவிவிட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு அரசு தன்னை தயார்படுத்தவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. "தொற்றுப் பரவல் காலத்தில் உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டன. அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கணிக்கத் தேர்தல் ஆணையமும் அரசாங்கங்களும் தவறிவிட்டன," என்று அவர் கூறினார்.
ராணுவத்தில் தொற்று அதிகரிப்பு
புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. மே 10ஆம் தேதி நிலவரப்படி 5,134 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 5,000 ராணுவ வீரர்கள் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று வாரத்தில் ராணுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1,067 ராணுவ வீரர்களுக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
கொரோனா தொற்றின் முதல் அலையில் 133 இராணுவ வீர்ர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

