இந்தியாவில் 4,000க்கும் மேற்பட்டோர் மரணம்

இந்தியாவில் 4,000க்கும் மேற்பட்டோர் மரணம்

2 mins read
ce2d3db1-425f-4d04-aec1-a31360b91bc9
-

கொவிட்-19 காரணமாக இந்தியாவில் இன்று மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தொடர்ந்து இரண்டு நாட்களாக 4,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 மரணங்களை இந்தியா பதிவு செய்துள்ளது.

கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 400,000க்கும் குறைவாகப் பதிவானது. இருப்பினும், கிராமங்களில் கொவிட்-19 கிருமி பரவுவதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கூடுதலாக இருக்க சாத்தியம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல கிராமங்களில் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வசதி இல்லாததால் உண்மை நிலவரம் தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் படுக்கைப் பற்றாக்குறை, ஆக்சிஜன் தோம்பு பற்றாக்குறை போன்றவற்றால் ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கும் இந்திய மருத்துவமனைகளுக்குக் கூடுதல் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆக அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கிராமங்களில் உள்ள மருத்துவ மனைகளில் மரணமடைந்த தங்கள் அன்புக்குரியவர்களின் உடலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு உறவினர்கள் கதறி அழும் காட்சிகளை இந்திய ஊடகங்கள் ஒளிபரப்பின. அதுமட்டுமல்லாது, தகனச் சாலைகளில் இடமில்லாததால் கங்கை ஆற்றிலும் கொவிட்-19 கிருமித்தொற்றால் மாண்டோரின் சடலங்கள் மிதப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, கொவிட்-19 கிருமித்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மேலும் ஆறிலிருந்து எட்டு வாரங் களுக்கு முடக்கநிலையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆய்வு மன்றத்தின் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் மளமளவென பரவி வரும் கிருமியைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார் அவர்.

இந்தியாவில் பெரும்பாலான மாவட்டங்களில் 10 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.தலைநகர் புதுடெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களும் அவற்றில் அடங்கும் என்றார் அவர். இதற்கிடையே, பி1617 வகை கொவிட்-19 கிருமியை இந்திய உருமாற்றக் கிருமி என அழைக்க வேண்டாம் என இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த வகை கிருமியை அவ்வாறு அழைப்பது தவறு என்றும் அது அறிவியல் ரீதியாகப் பொருந்தாது என்றும் துல்லியமற்றது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதை இந்திய அரசாங்கம் சுட்டியது.

"அந்த உருமாறிய கிருமியை முதன்முதலாக அடையாளம் கண்டு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் அது இந்திய உருமாற்றக் கிருமி என்றாகிவிடாது. பி1617 வகை கிருமிக்கு அவ்வாறு பெயர் சொல்லி அழைப்பது நியாயமற்றது," என்று இந்திய சுகாதார அமைச்சு அதிருப்தி தெரிவித்துள்ளது.

பி1617 வகை கொவிட்-19 கிருமி மிக எளிதில் பரவக்கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வகை கிருமி தற்போது பல நாடுகளுக்குப் பரவிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.