மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளை கறுப்புப் பூஞ்சை நோய் அதிக அளவில் தாக்குவது தெரியவந்துள்ளது. அங்கு சுமார் 2 ஆயிரம் பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது 111 பேர் மும்பை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக 'தினத்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கறுப்புப் பூஞ்சை நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழக்கும் வாய்ப்புண்டு என்று நிபுணர்கள் கூறுவதாக அந்தச் செயதி மேலும் தெரிவிக்கிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்தப் பாதிப்பு எளிதில் ஏற்படும் என்றும் கண்களுக்குக் கீழ் வலி, பார்வைக் குறைபாடு, காய்ச்சல் ஆகியவை இந்தப் பூஞ்சை பாதிப்புக்கான முக்கிய அறிகுறிகள் எனவும் தெரியவந்துள்ளது.
தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் பூஞ்சை பாதிப்பும் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 41 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த சில வாரங்களாக அங்கு பதிவான புது தொற்றுச் சம்பவங்களின் சராசரியைவிட இது குறைவானது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் கர்நாடகாவிலும் கேரளாவிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மரண எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

