முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு: தடையாணை பிறப்பித்த நீதிமன்றம்
கொழும்பு: முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த அப்பகுதி போலிசார் நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றுள்ளனர். இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களின் நினைவாக ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்நிகழ்வை நடத்தவும் மக்கள் ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவதற்கும் முல்லைத்தீவு காவல்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற தடையாணையை பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இத்தடை உத்தரவு அமலில் இருக்கும். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்த வீடுவீடாகச் சென்று இருக்கலாம் என்கிறது மும்பை நீதிமன்றம்
மும்பை: வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டிருந்தால் பலரது உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு ஒன்றின் விசாரணையின்போது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மூத்த குடிமக்களுக்கும் தடுப்பூசி மையங்களுக்கு வர இயலாதவர்களுக்கும் முன்கூட்டியே வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகளைத் தொடங்கினால் என்ன என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ள மும்பை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தொழில் உற்பத்தியில் வளர்ச்சி
மும்பை: கொரோனா விவகாரத்துக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் தொழில் உற்பத்தி 22.40 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. உற்பத்தித்துறை சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி அதிகரித்திருப்பதே இந்த உயர்வுக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொரோனா விவகாரம் காரணமாக இந்தியத் தொழில் உற்பத்தி 18.7 விழுக்காடு அளவிற்கு வீழ்ச்சி கண்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சிகளின் 9 பரிந்துரைகள்
புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து 9 பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவு தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மிகப்பெரிய அளவில், உடனடியாக இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை நீட்டிக்க உற்பத்தி உரிமத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிட வேண்டும் எனவும் அக்கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்க வேண்டும், தேவைப்படுபவர்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும், போராட்ட களத்தில் உள்ள விவசாயிகளைப் பாதுகாக்க வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் ஆகியனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள பரிந்துரைகளாகும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத் தயாரிப்பை வாங்கும் மத்திய அரசு
புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த சுமார் 150,000 உயிர்வாயு உபகரணங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் நிதியிலிருந்து ரூ.322 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உயர் மலைப் பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் பயன்பாட்டுக்காக உயிர்வாயு கருவிகளைத் தயாரித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்தக் கருவிகள் பெரும் உதவியாக உள்ளன. இந்த வகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் 40 விழுக்காடு அளவுக்கு உயிர்வாயுவை மிச்சப்படுத்த இயலும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
6,260 டன் திரவ எரிவாயுவை விநியோகித்த இந்தியன் ரயில்வே
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கான உயிர்வாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகும் நிலையில் 6,260 டன் உயிர்வாயு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 100 ஆக்சிஜன் விரைவு ரயில்கள், 396 டேங்கர்கள் மூலம் மருத்துவப் பயன்பாட்டிற்கான 6,260 டன் திரவ உயிர் வாயுவை பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற் கிடையே கத்தார் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட 40 மெட்ரிக் டன் உயிர்வாயு கப்பல் மூலம் இந்தியா வந்தடைந்தது.

