முதன்முறையாக கிராமப்புறங்களிலும் கொரோனா பரவுவதாக இந்திய பிரதமர் கவலை
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 மில்லியனைக் கடந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக மரணமடைந்தோர் எண்ணிக்கை நான்கு ஆயிரமாகப் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், கிருமித்தொற்று கிராமப்புறங்களுக்கும் அதிவேகமாகப் பரவி வருவதாக பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். நேற்று காணொளி வசதி மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடிய போது அவர் தன் கவலையை வெளிப்படுத்தினார்.
அனைத்து விவசாயிகளுக்கும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் கொரோனா கிருமி குறித்து மீண்டும் எச்சரிக்க விரும்புவதாக குறிப்பிட்ட அவர், இந்த போராட்டத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்று கிராமப்புறங்களுக்கு பரவுவது குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் பிரதமர் மோடி.
இதற்கிடையே கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 343,144 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. 4,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.
எனினும் கடந்த வாரம் புதிய உச்சமாக 414,188 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.
கொரோனாவால் நாட்டில் 24 மில்லியன் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 262,317 பேர் மாண்டுவிட்டனர்.
இந்நிலையில் பல கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்படாததால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிற்றூர்களிலும் ஊரகப் பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் உயிரிழந்த குடும்ப உறுப்பினருக்காக பலர் கண்ணீர் விடும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதாக ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.
"போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத்தின் அனைத்து துறைகள், ஆயுதப்படைகள், நமது விஞ்ஞானிகள் என அனைவரும் இரவு பகல் பாராமல் தொற்று நோய்க்கு எதிராக பணியாற்றி வருகின்றனர்," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்திய உருமாறிய கொரோனா எனக் குறிப்பிடப்படும் 'பி1617' மிக வேகமாக பரவக்கூடியது என்கிறார் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஜெய்ரோ மென்டெஸ்.
உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் 1,313ஆக அதிகரித்துள்ளது என்றும் இது கடந்த வாரத்தைவிட இரு மடங்கு அதிகம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
எதிர்வரும் 18, 20ஆம் தேதிகளில் இந்த ஆலோசனை நடக்க உள்ளதாக 'தினத்தந்தி' நாளேட்டின் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.

