புதுடெல்லி: தற்போது தயாரிப்பில் உள்ள மூன்று தடுப்பூசிகளுடன் மேலும் ஐந்து கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இவற்றுள் நான்கு தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.
தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு பில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேலும் புதிதாக ஐந்து தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வி.கே.பால் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நிர்ணயித்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

