செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
407c2a89-9455-4f74-bd75-7c9ec807c7ec
-

18,000 கைதிகளுக்கு தடுப்பூசி: திகார் சிறை நிர்வாகம் கோரிக்கை

புதுடெல்லி: திகார் சிறையில் உள்ள சுமார் 18 ஆயிரம் கைதிகளுக்கு உடனடியாக தடுப்பூசி போடவேண்டும் என சிறை நிர்வாகம் டெல்லி அரசுக்கு கடிதம் வழி கோரிக்கை விடுத்துள்ளது. இது தெற்காசியாவின் மிகப்பெரிய சிறையாகும். மூன்று கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறை நான்கு பிரிவுகளைக் கொண்டது. இங்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் கைதிகளை மட்டுமே கையாள முடியும். ஆனால், தற்போது 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 18 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டும் என திகார் சிறை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

நீதி விசாரணை கோரும் பிரியங்கா

லக்னோ: கங்கை நதியில் உடல்கள் மிதந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் கங்கை நதிக்கரையோரம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவை பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக வும் கூறப்படுகிறது. இவ்வாறு நிகழ்ந்தது மனிதத்தன்மை யற்ற குற்றச்செயல் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமை யில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் குற்றச்சாட்டு

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் அண்மையில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகளில் தாம் நினைத்ததை விட நிலைமை மோசமாக இருப்பதாக அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தாங்கர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் அமைதியாகத் தேர்தல் நடைபெற்றபோது மேற்கு வங்கத்தில் மட்டும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இது தமக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் கவலை தரக்கூடிய விஷயம் என்று குறிப்பிட்ட அவர், வன்முறை பாதித்த பகுதிகளை தாம் பார்வையிடக்கூடாது என முதல்வர் மம்தா கூறியது அதிர்ச்சி அளித்ததாகத் தெரிவித்தார்.

'5ஜி' சேவையைப் பெற நாற்பது மில்லியன் பேர் விருப்பம்

புதுடெல்லி: '5ஜி' அலைக்கற்றை சேவை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்திய மக்கள் 4 கோடி பேர் அதைப் பயன்படுத்த தயாராக இருப்பதாக அச்சேவையை வழங்கவுள்ள தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் 5ஜி சேவை குறித்து 26 நாடுகளில் அந்நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே 5ஜி விவேக கைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டால் முதல் ஆண்டிலேயே 4 கோடி பயன்பாட்டாளர்கள் கிடைப்பார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் விவேக கைபேசி பயன்படுத்துவோரில் 22 விழுக்காட்டினர் '4ஜி' சேவையைப் பெற்றுள்ளனர்.