இந்திய நிலவரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை

இந்திய நிலவரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை

2 mins read
c4808211-4ba3-42d3-a3bc-aeccb218b820
ஷிக்கான் நகரில் உள்ள தமது குடியிருப்பு வளாகத்தை 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை (இடது). படம்: டுவிட்டர்/ஏஎன்ஐ -

பல மாநிலங்களிலும் கொவிட்-19 பாதிப்பும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், இறப்பும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பதால் இந்தியாவில் கொரோனா பரவல் நிலைமை தொடர்ந்து பெரிதும் கவலை அளிப்பதாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள், கூடாரங்கள், நடமாடும் மருத்துவமனைகள், முகக்கவசங்கள், மற்ற மருத்துவத் தளவாடங்கள் ஆகியவற்றை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசுஸ் கூறியுள்ளார்.

"கொவிட்-19 தொற்றால் உலகில் இதுவரை 3.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இரண்டாம் ஆண்டாக நாம் அத்தொற்றை எதிர்கொண்டு வரும் நிலையில், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் அது இன்னும் அதிகமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தக்கூடும்," என்று டெட்ரோஸ் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்தியா மட்டும் அவசரகாலத் தேவைகளை எதிர்கொண்டு வரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நேப்பாளம், இலங்கை, வியட்னாம், கம்போடியா, தாய்லாந்து, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருவதைச் சுட்டினார்.

"தடுப்பூசிகளில் பெரும்பகுதியை வாங்கி வைத்துள்ள சில பணக்கார நாடுகள், தொற்று அபாயம் குறைவாக உள்ள பிரிவினருக்கும் இப்போது தடுப்பூசி போட்டு வருகின்றன," என்று திரு டெட்ரோஸ் சொன்னார்.

"சில நாடுகள் தங்களின் குழந்தைகளுக்கும் இளம்பருவத்தினருக்கும் தடுப்பூசி போட விரும்புவது எங்களுக்குப் புரிகிறது. ஆனால், இவ்வேளையில் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டும். மாறாக, தடுப்பூசிகளை 'கொவேக்ஸ்' திட்டத்திற்கு நன்கொடையாக அளிக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

"ஏனெனில், குறைந்த, கீழ்நிலை நடுத்தர வருமான நாடுகளில், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குப் போடுவதற்குக்கூட போதுமான அளவில் தடுப்பூசி விநியோகம் இல்லை. இப்போதைக்கு, தடுப்பூசி விநியோகத்தில் 0.3% மட்டுமே குறைந்த வருமான நாடுகளைச் சென்றடைகிறது," என்றும் திரு டெட்ரோஸ் தெரிவித்தார்.