டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளையர் பலி

டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளையர் பலி

1 mins read
c03ae988-f0af-4602-b2fb-6b00a6838329
படம்: இணையம் -

வாணியம்பாடி: டிராக்டரில் அமர்ந்தபடி செல்ஃபி எடுத்த 20 வயது இளையர் ஒருவர், சற்று நேரத்தில் டிராக்டருடன் பாசனக் கிணற்றில் விழுந்து மாண்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

வாணியம்பாடி அருகே சின்னமோட்டூர் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் சஞ்சீவ். சமையற்கல்வி பயின்று வந்த இவர், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தார்.

நேற்று முன்தினம் தமது வீட்டின் அருகேயுள்ள வேளாண் நிலத்திற்குச் சென்றார் சஞ்சீவ். அப்போது, அங்கு சௌந்தர் என்பவர் டிராக்டரில் உழுதுகொண்டிருந்தார். நண்பகல் உணவு உண்பதற்காக சௌந்தர் சாவியை எடுக்காமல் டிராக்டரை நிலத்தில் நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர் சென்றபின் டிராக்டரில் ஏறிய சஞ்சீவ், அதை ஓட்டுவதுபோல படம் எடுத்து, வாட்ஸ்அப் வழியாகப் பகிர்ந்தார். பின்னர் சாவியைச் சொடுக்கி டிராக்டரை இயக்க முயன்றபோது, அது கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த 120 அடி ஆழக் கிணற்றினுள் பாய்ந்தது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். கிணற்றில் 35 அடி ஆழத்திற்குத் தண்ணீர் இருந்ததால் சஞ்சீவைக் காப்பாற்ற அவர்கள், காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மின்மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கிய அவர்கள், கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாகப் போராடி சஞ்சீவை உயிரற்ற நிலையில் மீட்டனர்.

அதன்பின் சிறிது நேரம் கழித்து பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றில் விழுந்த டிராக்டரைத் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.