புதுடெல்லி: உயிர்வாயு செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்ற பிரபல தொழில் அதிபர் நவ்நீத் கல்ரா திடீரென தலைமறைவாகி உள்ளார்.
டெல்லி அரசியல் பிரமுகர்கள் பலருடன் நெருக்கமாக இருப்பவர் நவ்நீத் கல்ரா. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகப் பதவி ஏற்றபோது அந்நிகழ்வில் நவ்நீத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மேலும் 'டெல்லியைப் புனரமைத்தவர்' என்ற விருதையும் அளித்து கௌரவப்படுத்தியது டெல்லி அரசு.
இந்நிலையில் சீனாவிலிருந்து உயிர்வாயு செறிவூட்டிகளை இறக்குமதி செய்து அவற்றை நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதாக நவ்நீத் கல்ரா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவருக்குச் சொந்தமான உணவகத்திலிருந்து 524 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இயந்திரங்களை ரூ.80 ஆயிரத்துக்கு விற்றார் என்பது நவ்நீத் மீது டெல்லி காவல்துறை முன் வைத்துள்ள குற்றச்சாட்டாகும்.

