தொற்றுப்பரவல் குறையவில்லை: மே 23ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து அங்கு மே 23ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள நான்கு மாவட்டங்களில் 'முத்தடுப்பு' ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அன்றாடம் பதிவாகும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
எனினும் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எதிர்பார்த்த அளவு குறையவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஒன்பது நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு மட்டுமே கட்டுப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருப்பதாக கவலை தெரிவித்த அவர், அம்மாவட்டங்களில் 'முத்தடுப்பு' ஊரடங்கு அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.
தொற்றுப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நான்கு மாவட்டங்களிலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றும் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தரும் பலனை தெரிந்துகொள்ள சில நாட்கள் தேவைப்படும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
"மே மாதம் கேரளாவுக்கு மிக முக்கியமானது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குதான் வட மாநிலங்களில் கொரோனா தொற்று குறைய முக்கியக் காரணம்.
"ஆனால் தென் மாநிலங்களில் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் வடஇந்திய மாநிலங்கள் சந்தித்த சூழலை கேரளாவும் எதிர்கொண்டுள்ளது. மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்," என்றார் முதல்வர் பினராயி விஜயன்.

