பெங்களூரு: டவ் தே புயலின் தீவிரம் காரணமாக கர்நாடகாவில் 73 கிராமங்கள் சின்னபின்னமாகின. கேரளாவில் இருவர் கனமழைக்குப் பலியாகி உள்ளனர்.
தற்போது இந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்வதால் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களிலும் குஜராத்திலும் கனமழை பெய்து வருகிறது.
அண்மையில் அரபிக்கடலில் உருவானது டவ் தே புயல். இதன் தாக்கத்தால் ஐந்து மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. நேற்று முன்தினம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது.
கேரளாவில் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன.
எர்ணாகுளம் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா ஒருவர் மழைக்குப் பலியாகினர். ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கு மழை நீடித்துவரும் நிலையில் கர்நாடகாவிலும் கோரத்தாண்டவமாடியது டவ் தே புயல். அங்கு 73 கிராமங்கள் கனமழையால் கடும் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
டவ் தே புயல் மேலும் தீவிரமடையும் என்றும் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று குஜராத் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

