மே 26: கறுப்பு தினமாக அனுசரிக்கும் விவசாயிகள்

மே 26: கறுப்பு தினமாக அனுசரிக்கும் விவசாயிகள்

1 mins read
0d5bdac9-e480-4b10-89ad-34271091462a
-

புதுடெல்லி: எதிர்வரும் 26ஆம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகிறது என்றும் அதையொட்டி கறுப்பு தின அனுசரிப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் ரஜவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கள் போராட்டம் தொடங்கி மே 26ஆம் தேதியுடன் ஆறு மாதங்கள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையிலும் கறுப்பு தினம் அனுசரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மே 26ஆம் தேதியை நாட்டு மக்கள் அனைவரும் கறுப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என பல்பீர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடு, கடை, வாகனங்களில் கறுப்புக்கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.