செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
6ab10a60-e080-4fd4-a603-596002c7bcc0
-

'ரஷ்ய தடுப்பூசி சிறப்பாகச் செயல்படும்'

புதுடெல்லி: உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி சிறப்பாகச் செயல்படுவதாக இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் குடாஷேவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்ய தடுப்பூசி இந்தியாவிலும் தயாரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார். "இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்குள் 550 மில்லியன் ரஷ்ய தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு தவணைகளாக அல்லாமல் ஒரே தவணையில் செலுத்தக்கூடிய தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன," என்று ரஷ்யத் தூதர் மேலும் தெரிவித்தார்.

ஜூலைக்குள் 51 கோடி தடுப்பூசிகள் போடப்படும் என அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் 51 கோடி தடுப்பூசிகள் மக்களுக்குப் போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தடுப்பூசி உற்பத்தி நிலையங்கள் அதிகரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசிகளின் கையிருப்பு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 216 கோடியாக அதிகரிக்கும் என்றும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த 16 தினங்களில் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 4.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

போலி ஊசி போட்டுக்கொண்ட பிறகும் உயிர் பிழைத்த அதிசயம்

போபால்: போலி ரெம்டெசிவிர் ஊசி போட்டுக்கொண்ட கொவிட் நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பலர் அம்மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்றுவரும் நிலையில் அம்மாநிலத்தில் போலி மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்தூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்குப் போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்டது. இதில் 10 நோயாளிகள் மரணமடைந்தனர். எனினும் 90 விழுக்காடு நோயாளிகள் பாதிப்பின்றி உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து போலி ரெம்டெசிவிர் விநியோகித்த கும்பல் கைதாகியுள்ளது.

இறுதிச்சடங்கின் போது

கண் விழித்த மூதாட்டி

மும்பை: கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக கருதப்பட்ட 76 வயது மூதாட்டி இறுதிச் சடங்கின்போது திடீரென எழுந்து அமர்ந்தார். புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சகுந்தலா. 'கொவிட்-19' பாதிப்பால் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து குடும்பத்தார் அவரை ஒரு வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. நீண்டநேரமாக மூதாட்டியிடம் எந்த அசைவும் காணப்படாததால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி வீடு திரும்பிவிட்டனர். பின்னர் இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோது திடீரென அழுதபடியே எழுந்து அமர்ந்தார் மூதாட்டி சகுந்தலா. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரத்தில் ஏறி தம்மை தனிமைப்படுத்திய ஆடவர்

ஹைதராபாத்: மருத்துமனைக்குச் செல்ல பயந்து மரத்தின் மீதேறி நூதன முறையில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கொரோனா நோயாளி ஒருவர். தெலுங்கா னாவைச் சேர்ந்த 25 வயதான சிவா என்ற அந்த ஆடவர் ஓர் அறை மட்டுமே உள்ள வீட்டில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. எனினும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து விட்ட அவர், தன் வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தின் மீதேறி, அங்கு ஒரு கட்டிலை கயிற்றில் கட்டி தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு தினமும் மருந்து மாத்திரைகள், உணவை குடும்பத்தார் அளித்து வருகின்றனர்.