கோல்கத்தா: மேற்கு வங்க மாநில அமைச்சர்கள் இருவரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.
லஞ்சம், ஊழல் வழக்கு தொடர்பாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
மாநில அமைச்சர்கள் இருவர் கைது செய்யப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேண்டுமானால் தம்மையும் கைது செய்யட்டும் என அவர் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
நேற்று கோல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வெளியே திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் தம்மை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஏழு பேரை அணுகினார்.
மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு அமைச்சர்களுக்கு அவர் லஞ்சம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது இந்த லஞ்ச விவகாரம் பெரிதாக வெடித்தது. எனினும் அத்தேர்தலில் மம்தா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் லஞ்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட சுப்ரதா முகர்ஜி, பிர்ஹாத் ஹக்கீம் ஆகிய இருவரும் இப்போது மேற்கு வங்க அமைச்சர்களாக உள்ளனர்.
இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
இதையடுத்து இந்த வழக்கில் நேற்று காலை இரு அமைச்சர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இரண்டு தலைவர்கள் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து அறிந்த முதல்வர் மம்தா பானர்ஜி, கட்சி நிர்வாகிகளுடன் உடனடியாக சிபிஐ அலுவலகத்துக்கு விரைந்தார்.
அங்கு அதிகாரிகளுடன் ஆவேசமாக வாக்குவாதம் செய்த அவரிடம் விசாரணைக்குப் பின்னர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த முதல்வர் மம்தா தனது கட்சித் தலைவர்களைக் கைது செய்வதாக இருந்தால் தம்மையும் கைது செய்யவேண்டும் என கோபத்துடன் கூறினார்.

