புதுடெல்லி: மத்திய அரசுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டுவதுகூட குற்றச்செயலாகுமா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் விமர்சிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
'நம் குழந்தைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்?' எனும் வாசகம் அவற்றில் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக டெல்லி போலிசார் 25 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தச் சுவரொட்டியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, 'பிரதமருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியது குற்றமா' என கேள்வி எழுப்பி உள்ளார்.
"கொரோனா தொற்றுக்கு மத்தியில் நின்றுகொண்டிருக்கிறோம். காவல்துறைக்கு வேறு வேலை இல்லையா? நான் என் வீட்டுச் சுவரில் இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டுவேன். என்னையும் கைது செய்யுங்கள்," என ராகுல்காந்தி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

