கொரோனா தடுப்பு ஆய்வுக் குழுத் தலைவர் பதவி விலகல்

கொரோனா தடுப்பு ஆய்வுக் குழுத் தலைவர் பதவி விலகல்

1 mins read
84a8a8ac-e05b-4495-a885-9a03846d6e5d
-

புதுடெல்லி: மத்திய அரசின் கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு ஆய்வு, ஆலோசனைக் குழு தலைவர் பதவியில் இருந்து மூத்த தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஷாகித் ஜமீல் விலகியுள்ளார்.

அவரது திடீர் விலகலுக்கான காரணம் தெரியவில்லை. எந்தக் காரணத்தையும் தெரிவிக்க தாம் விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியாவிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா கிருமிகள் குறித்து ஷாகித் ஜமீல் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் ஷாகித் ஜமீல் பதவி விலகியுள்ளார்.

அண்மையில் 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளேட்டில் இவரது கட்டுரை ஒன்று வெளியானது.

அதில், இந்திய அரசின் செயல்பாடுகளை ஷாகித் ஜமீல் விமர்சித்திருந்தார்.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் ஷாகித் ஜமீல் தமது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாகவே அவர் ஆய்வுக் குழுவில் இருந்து விலகியதாக ஒருதரப்பினர் கூறுகின்றனர்.