நாக்பூர்: கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கண் பார்வை பறிபோனதாக வெளியான தகவல் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பார்வை இழந்தவர்களின் கண்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுவதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
நோய் அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்வதாலும் நோய்த்தொற்றில் இருந்து விடுபட உரிய மருந்துகளை உட்கொள்ளாததும் நிலைமையை மோசமடையச் செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுவரை சுமார் 75 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும், தற்போது கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அந்த ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடும் சிலருக்கு கறுப்புப் பூஞ்சை நோய்த் தாக்கம் ஏற்படுகிறது. பற்கள், சைனஸ் பகுதிகளை பாதிக்கும் இந்நோய் முற்றிப்போகும் பட்சத்தில் கண்களையும் தாக்குகிறது.
பின்னர் நரம்பு மண்டலத்தைப் பாதித்து ஒருவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. பூஞ்சை நோய் முற்றிப்போகும் பட்சத்தில், கண்களை முற்றிலுமாக அகற்ற வேண்டி இருக்கும் என்றும் சிலருக்கு ஒரு கண்ணை மட்டும் அகற்றினாலே போதுமானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கறுப்புப் பூஞ்சை நோய் பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நோய்க்குப் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவை அடுத்து கர்நாடகா, கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கறுப்புப் பூஞ்சை நோய் பரவியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் பூஞ்சை நோய் பாதிப்பு காரணமாக இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 பேரில் இருவர் இறந்துவிட்டனர்.
கேரளாவில் ஏழு பேருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவுரங்காபாத் நகரில் 16 பேர் இந்நோய்க்குப் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் உரிய சிகிச்சை பெற்றால் பூஞ்சை நோயில் இருந்து எந்த பாதிப்பும் இன்றி குணமடையலாம் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனாவைத் தொடர்ந்து கறுப்புப் பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

