செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d2d89434-b657-45e1-8fd2-0945bed20797
-

வெளிநாடுகளில் இருந்து 13,496 உயிர்வாயு உருளைகள் வந்துள்ளன

புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலையில் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து 13,496 உயிர்வாயு உருளைகள் வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 11,058 உயிர்வாயுச் செறிவூட்டிகள், 19 உயிர்வாயு உற்பத்தி அலகுகள், 7,365 செயற்கை சுவாசக் கருவிகள், 530,000 ரெம்டெசிவிர் மருந்துக்குப்பிகள், இந்தியா வந்தடைந்துள்ளன. கஸக்ஸ்தான், ஜப்பான், சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன.

மும்பையில் குறையும் தொற்று பாதிப்பு

மும்பை: மும்பையில் கொரோனாவின் தாக்கம் வேகமாகக் குறைந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் 1,544 பேர் மட்டுமே புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தொற்று பாதித்தவர்களில் 92 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்று மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது தொற்றுப்பரவல் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இறுதிச்சடங்குக்கு ரூ.15 ஆயிரம்

அமராவதி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகளைச் செய்வதற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் ஏழை மக்கள் கொரோனா தொற்றால் தங்கள் குடும்பத்தில் யாரேனும் இறக்கும்போது இறுதிச் சடங்கு செய்ய பணமின்றி தவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து இறந்தவருக்கு இறுதிச்சடங்குகள் நடத்த அவரது குடும்பத்தாருக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் இத்தொகையை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் 200,070 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 9,271 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

ஊரடங்கு விதிமுறைகள் மீறல்: பாஜக எம்எல்ஏக்கள் மூவர் கைது

கோல்கத்தா: ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற புகாரின் பேரில் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏக்கள் மூன்று பேர் கைதாகி உள்ளனர். மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் அலட்சியமாக செயல்படுவதாக பாஜக சாடியுள்ளது. இதையடுத்து அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கூட்டம் கூட அனுமதி இல்லாத இடத்தில் போராடியதாக கூறி போலிசார் மூன்று பாஜக எம்எல்ஏக்களை கைது செய்துள்ளனர்.

விவசாயிகள் மீது தடியடி

சண்டிகர்: ஹரியானா முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போலிசார் தடியடி நடத்தினர். நேற்று முன்தினம் ஹிசர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்றார் முதல்வர் மனோகர் லால் கட்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான விவசாயிகள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முதல்வருக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதை அடுத்து போலிசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர்.