கரையைக் கடந்தது 'டவ்தே' புயல்: ஐந்து மாநிலங்களில் பெரும் சேதங்கள்
மும்பை: 'டவ்தே' புயல் நேற்று முன்தினம் இரவு குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் கரையைக் கடந்தது. இந்நிலையில் கடும் சூறாவளிக் காற்றால் நடுக்கடலில் கவிழ்ந்த படகிலிருந்து 146 பேர் மீட்கப்பட்டனர்.
எனினும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தின் ஊழியர்கள் 127 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'டவ்தே' புயல் காரணமாக மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மும்பை மாநகரில் பலத்த காற்றும் வீசியது. மும்பை அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய படகில் 'ஓஎன்ஜிசி' ஊழியர்கள் 273 பேர் தங்கியிருந்தனர். இந்தப் படகு அவர்கள் தங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் மும்பை கடற்கரைப் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றின் காரணமாக அந்தக் கப்பல் நங்கூரத்தையும் இழுத்துக்கொண்டு நகரத் தொடங்கியது.
பின்னர் அருகில் இருந்த எண்ணெய் கிணற்றின்மீது மோதியது. இதனால் அந்தப் படகு சேதமடைந்ததை அடுத்து கடல்நீர் உள்ளே நுழையத் தொடங்கியது.
தகவலறிந்து நடுக்கடலுக்கு விரைந்த இந்திய கடற்படைக் கப்பல்கள் உடனடியாக மூழ்கும் படகில் இருந்து ஊழியர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன.
நேற்று காலை 146 பேரை மீட்டுள்ளதாகவும் எஞ்சிய 127 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,500 வீடுகள் சேதம்; 7 பேர் பலி
நேற்று முன்தினம் 'டவ்தே' புயல் மகாராஷ்டிராவில் பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. 2,500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் புயல் சீற்றத்துக்கு ஏழு பேர் பலியாகி உள்ளதாகவும் 'தினத்தந்தி' நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது.
தலைநகர் மும்பையில் 26 இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர். மும்பை பெருநகர்ப் பகுதியில் 600 மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் தண்ணீர் வெள்ளமெனத் தேங்கியுள்ளது.
'டவ்தே' புயல் காரணமாக மும்பையில் மட்டும் 214 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் அங்கு 190 மில்லிமீட்டர் அளவிலான மழை பெய்திருந்தது.
இரவில் இருளில் மூழ்கிய கோவா
அண்டை மாநிலமான கோவாவில் மின் இணைப்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் அம்மாநில மக்கள் இருளில் பொழுதைக் கழித்தனர்.
'டவ்தே' புயலுக்கு கேரளாவில் ஆறு பேரும் கர்நாடகாவில் எட்டு பேரும் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 121 கிராமங்களை இந்தப் புயல் சூறையாடியுள்ளது.
கேரளாவில் ஏழு பேர் இறந்த நிலையில் 1,500 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
40 ஆயிரம் மரங்கள் சாய்ந்தன
குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன என்றும் 2,400 கிராமங்களுக்கு மின் விநியோகம் தடைபட்டதாகவும் 'ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் இருநூறாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். குஜராத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மணிக்கு 150 கிலோமீட்டருக்கு மேல் வீசிய சூறைக்காற்றுடன் புயல் ஒன்று கரையைக் கடந்துள்ளது.
சேதத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் விரைவில் முழு விவரங்களும் வெளியிடப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.