புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றுப்பரவல் குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
எனினும் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு நீடிக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை டெல்லியைப் புரட்டிப் போட்டு வருகிறது. அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தொற்றுப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாதத்துக்குப் பிறகு தொற்றுப் பரவல் விகிதம் டெல்லியில் 11 விழுக்காடாக குறைந்துள்ளது. எனினும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும் என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.
இருதினங்களுக்கு முன்பு அங்கு அன்றாட தொற்று எண்ணிக்கை 10,489ஆக பதிவானது. எனினும் நேற்று முன்தினம் சுமார் ஆறாயிரம் பேருக்கு மட்டுமே புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளமுதல்வர் கெஜ்ரிவால், இவ்வேளையில் யாரும் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்றார்.
"தொற்று மீண்டும் அதிகரிக்காமல் இருக்க, இறைவனை வேண்டிக் கொள்வோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிகளுக்கென புதிதாக 500 அவசர சிகிச்சைப் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உயிர்வாயு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார் முதல்வர் கெஜ்ரிவால்.
டெல்லியில் நேற்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 24ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மகாராஷ்டிராவிலும் தொற்றுப் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் 26,616 பேருக்கு புதிதாக கிருமி தொற்றிய நிலையில், அன்றைய தினம் 48,211 பேர் குணமடைந்ததாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
அங்கு தினந்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த எண்ணிக்கை பாதிக்கும் கீழ் சரிந்துள்ளது.

