செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3ac9fca8-5f2c-4c9d-8842-729f2dcdd6b7
-

ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் ரூ.10 லட்சம் வைப்புத்தொகை

அமராவதி: கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பெயரில் வங்கிகளில் பத்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்தப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆதரவற்ற குழந்தைகளின் நல்வாழ்வுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய பிரதேசம், டெல்லி அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒவ்வொரு ஆதரவற்ற குழந்தையின் பெயரிலும் தலா 10 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்தப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஆந்திராவில் கொரோனாவால் இறப்பவர்களுக்கு இறுதிச்சடங்குகளை நடத்த 15 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

புதையலுக்காக தோண்டிய சுரங்கம்

அமராவதி: திருப்பதி சேஷாசலம் மலையடிவாரத்தில் புதையல் இருப்பதை நம்பி சுரங்கம் தோண்டிய 6 பேர் கைதாகினர். சித்தூரைச் சேர்ந்த அவர்கள் கடந்த ஓராண்டாக சுமார் 80 அடி தூரத்துக்கு சுரங்கம் தோண்டியது தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றித் திரிந்தது போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களைப் பிடித்து விசாரித்தபோதுதான் புதையலைத் தேடி அவர்கள் சுரங்கம் தோண்டியது தெரியவந்தது. இந்தப் பணியில் ஈடுபடுத்த வாரந்தோறும் தமிழகம், கர்நாடகா என்று அண்டை மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்துள்ளனர். மூவரும் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 3 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சாமியார் ஒருவர் கூறிய அருள்வாக்கை நம்பி இவ்வாறு செய்ததாக கைதான ஆறு பேரும் தெரிவித்துள்ளனர்.

செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலஞ்சென்ற முதல்வர் மு. கருணாநிதி பெயரில் இந்த விருது வழங்கப்படும் என்றும் பரிசுத்தொகையாக ரூபாய் 10 லட்சமும் பாராட்டுச் சான்றிதழும் ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலை, கருணாநிதி உருவம் பொறித்த 10 பவுன் தங்கப்பதக்கம் ஆகியனவும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தொல்லியல், கல்வெட்டியியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலை துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கோ, ஆய்வுக் குழுவினருக்கோ வழங்கப்படும்.

தாதியை மிரட்டிய மூவர் கைது

பெங்களூரு: கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய தாதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக பெங்களூரு போலிசார் மூன்று இளையர்களைக் கைது செய்தனர். 20 முதல் 27 வயதுக்குட்பட்ட அம்மூவரும் 20 வயதான பிரியதர்ஷினி என்பவரை தாக்கினர். கொரோனா பிரிவில் பணியாற்றுவதால் பிரியதர்ஷினி மூலம் தாங்கள் வசிக்கும் பகுதியில் தொற்று பரவும் என்று கூறிய மூவரும் கத்தியைக் காட்டியும் மிரட்டியுள்ளனர்.

1,200 வங்கி ஊழியர்கள் மரணம்

லக்னோ: கொரோனா பாதிப்பினால் வங்கிகள் 1,200 ஊழியர் களை இழந்துள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. இதேபோல் உத்தரபிரதேச பஞ்சாயத்துத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களில் 1,621 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில ஆரம்ப ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.