இந்தியாவில் அபாயம் நீடிப்பு: உலக நிறுவனம்

இந்தியாவில் அபாயம் நீடிப்பு: உலக நிறுவனம்

2 mins read
706d5cd2-40af-4fad-8e77-f2fd04a71199
-

புதுடெல்லி: இந்தியாவில் இன்று காலை வெளியிடப்பட்ட தகவலின்படி ஒரே நாளில் 4,529 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர். இதுவே அங்கு பதிவான ஆக அதிகமான மரண எண்ணிக்கை. புதிய மரணங்களையும் சேர்த்து இதுவரை 283,248 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

இதன் மூலம் உலக அளவிலான தொற்று மரணப் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்காவில் 600,000க்கும் மேற்பட்டோரும் பிரேசிலில் 440,000க்கும் மேற்பட்டோரும் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர்.

இந்தியாவில் புதிதாகப் பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 14ஆம் தேதி முதல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

ஆறாவது நாளாக இந்த எண்ணிக்கை குறைந்தபோதிலும் மரண எண்ணிக்கை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 4,000க்கும் மேல் பதிவாகி வருகிறது.

குறிப்பாக, சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் குறைவாக இருக்கும் கிராமப்புறங்களில் தொற்று எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் அபாயம் நீடிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே 16 வரையிலான ஒரு வார காலத்தில் இந்தியாவில் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை அதற்கு முந்திய வாரத்தைக் காட்டிலும் 13 விழுக்காடு குறைவு.

"ஆயினும் மரண எண்ணிக்கை 4 விழுக்காடு அதிகரித்துவிட்டது. ஒரே வாரத்தில் 27,922 பேர் உயிரிழந்துவிட்டனர். இது கவனிக்கப்பட வேண்டிய நிலவரம். 100,000 பேருக்கு 2 புதிய மரணம் என்ற விகிதத்தில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

"இந்தியா மட்டுமல்லாது உலக அளவில், மேற்கத்திய பசிபிக் வட்டாரம் தவிர, இதரப் பகுதிகள் அனைத்திலும் தொற்று எண்ணிக்கை இந்த வாரம் குறைவாகப் பதிவாகி உள்ளது," என்று தெரிவித்துள்ளது.