லக்னோ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீடு தேடிச் சென்று இலவசமாக உயிர்வாயு தோம்புகளை விநியோகித்து வருகிறார்.
இதையடுத்து அவரை 'சிலிண்டர் மகள்' என்று பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷி. சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு உயிர்வாயு உதவி தேவைப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரியுள்ளார் அர்ஷி. ஆனால் மருத்துவமனையில் சேர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதை விரும்பாத அர்ஷி வீட்டில் வைத்தே தந்தைக்கு சிகிச்சை அளித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ஓர் உயிர்வாயு தோம்பும் அவருக்குக் கிடைத்தது.
தந்தை குணமடைந்த பிறகு அவரைப் போலவே தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிர்வாயு தோம்பு அளித்து உதவுவது என முடிவு செய்துள்ளார் அர்ஷி.
அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சமூக ஆர்வலர்கள் மூலம் இவருக்கு உயிர்வாயுத் தோம்புகள் கிடைக்கின்றன. அவற்றைப் பெற்று தமது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தேவை உள்ளவர்களுக்கு இலவசமாக அளித்து வருகிறார்.
இதுவரை 45 உயிர்வாயு தோம்புகளை தாம் விநியோகித்துள்ளதாகக் கூறும் அர்ஷி, விளம்பரத்துக்காக தாம் இவ்வாறு செய்யவில்லை என்கிறார். இந்தச் சேவையின் காரணமாக அர்ஷியை அவர் வசிக்கும் ஷாஜகான்பூர் பகுதி பொதுமக்கள் 'சிலிண்டர் பேட்டியா' (சிலிண்டர் மகள்) என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர்.
இந்திய ஊடகங்களிலும் அர்ஷி பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகின்றன.

