உத்தரப் பிரதேச அமைச்சர் கொரோனா கிருமித்தொற்றால் காலமானார்
லக்னோ: கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் உத்தரப் பிரதேச மாநில வருவாய்த்துறை அமைச்சர் விஜய் காஷ்யப் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 52. விஜய் காஷ்யப் மறைவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் இதுவரை 5 எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா ஆதிக்கம் இல்லாத கிராமம்
திருவனந்தபுரம்: கேரளாவில் மூணாறு பகுதியில் உள்ள பிரமலக்குடி கிராமத்தில் இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இங்கு சுமார் 750 குடும்பங்கள் வசிக்கின்றன. இதன் மக்கள் தொகை மூவாயிரம் ஆகும். இக்கிராமத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுகின்றனர். ஊர்க் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே ஒருவர் கிராமத்தை விட்டு வெளியே செல்லவும் வீடு திரும்பவும் முடியும். வெளியூர் ஆட்கள் கிராமத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து சார்பில் இங்குள்ள அனைவருக்கும் முகக்கவசம், கிருமிநாசினிகள் வழங்கப்பட்டுள்ளன. நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வனத்துறை உள்ளிட்ட எந்தத் துறையின் அதிகாரிகளாக இருந்தாலும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஊருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகள்: எடுத்துக்காட்டாய் விளங்கும் கிராமம்
அமராவதி: ஆந்திராவில் உள்ள துக்கிரிலப்பாடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளனர். அக்கிராமத்தில் வெளியே செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் கிருமிநாசினியைக் கையில் வைத்திருப்பதும் அவசியம். பொது இடங்களை வாரம் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துகின்றனர். கிராமத்து வடிகால்கள் இரு தினங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும். கிராமத்தில் எட்டு கடைகள் உள்ளன. கூட்டம் சேர்வதைத் தவிர்க்க ஒரு கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு வார்டு மக்கள் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். திருவிழா, மங்கல நிகழ்ச்சிகள், சடங்குகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை கிராமங்களில் நடக்கும் எந்த நிகழ்வுகளிலும் துக்கிரி லப்பாடு கிராம மக்கள் பங்கேற்பதில்லை.
பிரிட்டனில் முடக்கநிலை உத்தரவை திரும்பப் பெறுவது தாமதமாகலாம்
லண்டன்: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட 'பி16172'
உருமாறிய கொரோனாவின் தொற்றும் வேகம் முன்பு கணித்ததைவிட சற்றே குறைவாக இருக்கும் என பிரிட்டன் மருத் துவ நிபுணர் தெரிவித்துள்ளார். எனினும் இதன் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் அவர் கூறி உள்ளார். இந்நிலையில் உருமாறிய கொரோனா காரணமாக ஜூன் 21ஆம் தேதி பிரிட்டனில் உள்ள முடக்கநிலை உத்தரவை திரும்பப் பெறுவது என்ற தமது முடிவு மேலும் தாமதமாகலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரை வழிமறித்த விவசாயிகள்
போபால்: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோம ரின் காரை வழிமறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஷியோபூரில் காரை மறித்த விவசாயிகள் அமைச்சருடன் பேச விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய பின் அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

