செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
54143925-87e7-43b0-bed8-a306b8b35643
-

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா தொற்றால் மரணம்

புதுடெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான ஜெகநாத் பகாடியா கொவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 89. ஜெகநாத் பகாடியா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1980-81ஆம் ஆண்டில் ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்தார். ஹரியானா, பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முதுமை காரணமாக ஓய்வில் இருந்த அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இணைய மோசடியைக் கண்டுபிடிக்க

நவீனக் கருவி 'ஃபேக்பஸ்டர்'

சண்டிகார்: பஞ்சாப் மாநிலத்தின் ரோபோரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இணையக் கருத்தரங்குகளில் எவருக்கும் தெரியாமல் நுழையும் போலியானவர்களைக் கண்டறிவதற்காக 'ஃபேக்பஸ்டர்' என்று அழைக்கப்படும் தனித்துவம் வாய்ந்த கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளனர். சமூக ஊடகங்களில் ஒருவரது முகத்திற்குப் பதிலாக வேறு ஒருவரின் முகத்தை மாற்றி அவருக்கு இழுக்கு உண்டாக்குதல் போன்ற செயல்களை இந்தக் கருவியின் உதவியால் கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கொவிட்-19 தொற்றுக்கு 64.6% இளைஞர்கள் பாதிப்பு: உத்தரகாண்ட் அரசு

டெராடுன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் இளையர் என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்துள்ளது. 64.6 விழுக்காட்டு இளைஞர்களைத் தொற்று பாதித்துள்ளது என்று அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை செயலர் அமித் நேகி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட்டில் 20 முதல் 49 வயதினரிடையே அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அங்கு வேகமாகப் பரவி வரும் தொற்றைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதற்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். புதன்கிழமை நிலவரப்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலின் வேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து அம்மாநிலம் தொற்று பரிசோதனையை இரட்டிப்பாக்கியுள்ளது என திரு அமித் நேகி தெரிவித்தார்.