கறுப்பு பூஞ்சையால் 150 பேர் பாதிப்பு; மக்களிடையே அச்சம்

கறுப்பு பூஞ்சையால் 150 பேர் பாதிப்பு; மக்களிடையே அச்சம்

2 mins read
fd56eb89-5da4-414e-a475-d2f8a1936b47
படம்: ஏஃப்பி -

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகள் வீட்டிலும் முகக்கவசம் அணிவது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு இஎன்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தெலுங்கானாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று டெக்கான் குரோனிக்கல் தெரிவித்தது.

ஐம்பது படுக்கைகள் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பிவிட்டது என்றனர்.

"கறுப்பு பூஞ்சையால் மூக்கு மற்றும் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்படுகிறது.

"சைனஸ் போன்ற மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு வெளி நோயாளியாக சிகிச்சை அளிக்கப் படுகிறது," என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கிருமித்தொற்று பரிசோதனைக்காக வெளிநோயாளி சிகிச்சைப் பிரிவுக்கு பலர் படை யெடுப்பதால் அங்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளதால் அனைவரும் பரிசோதனைக்கு ஓடி வருகின்றனர் என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.

இதற்கிடையே கேரளா மாநிலத்தில் கறுப்பு பூஞ்சை நோய் காரணமாக இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது கறுப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது.

வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவி வருவதால் அனைத்து மாநிலங்களும் கறுப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருவனந்த புரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது பெண் கறுப்பு பூஞ்சைக்குப் பலியாகியுள்ளார்.

கேரளாவில் மட்டும் இதுவரை 15 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

இதே மாநிலத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதித்தவரின் கண் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 197 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் சிலர் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் 'ஆம்போடெரிசின் பி' மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 5,000 'ஆம்போடெரிசின் பி' மருந்துகளை தருவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.