பனாஜி: 'டெஹல்கா' நிறுவனரும் முன்னாள் தலைமை ஆசிரியருமான தருண் தேஜ்பாலை பாலியல் வழக்கிலிருந்து கோவா நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்கம் நடைபெற்றபோது அதில் பங்கேற்ற சக பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 2014ல் இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
2017ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, சட்டவிரோதமாக தடுத்து வைத்தது உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி தருண் தேஜ்பால் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால், இந்த முறையீட்டை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கோவா நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி, இந்த வழக்கு விசாரணை கோவா மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இருந்து தருண் தேஜ்பாலை விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தருண் தேஜ்பாலின் மகள் கேரா தேஜ்பால் தந்தை சார்பாக அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில், "பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததாக அவர் தெரி வித்தார்.
"நீதிமன்றத்தின் சார்பற்ற, நேர்மையான விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் தீர ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆழ்ந்த மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தருண் தேஜ்பால் கூறியிருந்தார்.
கிருமித் தொற்றால் உயிரிழந்த தமது வழக்கறிஞர் ராஜீவ் கோம சுக்கும் அவர் நன்றி கூறினார்.

