புதுடெல்லி: இந்தியாவில் புதிய தொற்றுச் சம்பவங்கள் குறைந்து உள்ளன.
கிருமிப் பரவல் 2ஆம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
இதன் காரணமாக நாள்தோறும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4 லட்சம் என்ற உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது.
குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று மாலைமலர் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 259,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,60,31,991 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 4,209 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம் கிருமித் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 291,331 ஆக உயர்ந்துள்ளது.
முந்தைய நாள் உயிரிழப்பு 3,874 ஆக இருந்த நிலையில், தற்போது 4,000 தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,12,735 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 357,295 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.12 விழுக்காடாக அதிகரித்துள்ளது. குணமடையும் விகிதம் 87.25 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30.27 லட்சமாக குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 30,27,925 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரை பொதுமக்களுக்கு 19,18,79,503 முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

