சட்டீஸ்கரில் பரபரப்பு; இளையரை அறைந்த ஆட்சியர் இடமாற்றம்

சட்டீஸ்கரில் பரபரப்பு; இளையரை அறைந்த ஆட்சியர் இடமாற்றம்

2 mins read
29fd9802-6bc6-4e5d-ada2-75841d4b0cd1
இளைஞரை மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காணொளிப்படம்: தினமலர் -

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் இளையரை மாவட்ட ஆட்சியர் அறைந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ள சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்ற அந்த இளையர் தனது இரு சக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்துக் கடைக்கு மருந்து வாங்க சென்றபோது அவ்வழியாக வந்த போலிசார் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

வாகனத்தின் ஆவணங்களை அவர் போலிசாரிடம் காட்டும்போது அங்கு மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவும் வந்தார்.

அந்த இளையரின் கைப்பேசியை வாங்கிப் பார்த்த மாவட்ட ஆட்சியர், அதை தரையில் வீசி உடைக்கும் காட்சி காணொளியில் பதிவானது.

அதுமட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அந்த இளையரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் போலிசாரும் தங்களது பங்கிற்கு அந்த இளையரைத் தாக்கினர். இந்த காெணாளி இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த இளையர் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும் அதனாலயே அவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "அந்த நபர் தடுப்பூசி வாங்கு வதற்கு வெளியே வந்ததாகக் கூறினார். ஆனால் அவரிடம் சரியான ஆவணம் இல்லை. பின்னர், அவர் தனது பாட்டியைப் பார்க்கப் போவதாகக் கூறினார். அவர் தவறாக நடந்துகொண்ட தருணத்தில் நான் அவரை அறைந்தேன். அவருக்கு வயது 23-24க்குள் இருக்கும். ஆனால் 13 வயது அல்ல. எனது நடத்தைக்கு நான் வருந்துகிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஏஎஸ் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "சட்டீஸ்கர் ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவின் நடத்தையை ஐஏஎஸ் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. சேவை, நாகரிகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. கடினமான காலங்களிலும் சமுதாயத்திற்கு ஏற்ற செயல்களைச் செய்ய வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவை இடமாற்றம் செய்து சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்