கோல்கத்தா: அவசர அவசரமாக முடிவு எடுத்து மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த சோனாலி குஹா மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்குத் திரும்ப முயற்சி செய்து வருகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இவர் நான்கு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேற்கு வங்காள சட்டசபையின் முதல் பெண் துணை சபாநாயகராகவும் திகழ்ந்த சோனாலி குஹா, மம்தாவுக்கும் நெருக்கமாக இருந்து வந்தார்.
ஆனால் அண்மையில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களுடன் இந்த சோனாலி குஹாவும் பாஜகவுக்குத் தாவினார். ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.
சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த நிலையில் மனம் மாறி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர சோனாலி குஹா விருப்பம் தெரிவித்து கட்சித் தலை வரும் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
"உடைந்துபோன இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உணர்ச்சிவசப்பட்டு நான் வேறொரு கட்சியில் சேர எடுத்த முடிவு தவறானது. என்னால் அங்கு இருக்க முடியவில்லை.
"மீன் தண்ணீருக்கு வெளியே இருக்க முடியாது. நீங்கள் இல்லாமல் நான் இருக்க முடியாது தீதி(அக்கா), உங்கள் மன்னிப்பை நாடுகிறேன். நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால் என்னால் வாழவே முடியாது. நான் திரும்பி வரவும் மீதியான என் நாட்களை உங்கள் பாசத்தில் கழிக்கவும் அனுமதியுங்கள்," என்று உருக்கமாக அவர் கடிதம் எழுதி உள்ளார். சமூக ஊடகங்களிலும் அவர் தனது கடிதத்தை வெளி யிட்டுள்ளார்.
ஆனால் இவரது கடிதம் மம்தாவின் கண்களில் பட்டதா என்பது தெரியவில்லை.
இதற்கிடையே சோனாலி குஹாவின் முடிவால் மேற்குவங்க பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

