செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
32c331cc-553e-4b34-b044-ce09aee6664d
-

கிருமி பாதிப்பு குறைகிறது

புதுடெல்லி: கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 20 நாட்களாக குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது என்று இந்திய சுகாதார அமைச்சின் இணைச் செயலர் லவ் அகர்வால் தெரிவித்தார். "கடந்த மே 3ஆம் தேதி 17.13%ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இப்போது 11.12% குறைந்துள்ளது. அதுபோல பாதிப்பில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த மே 3ஆம் தேதி 81.7%ஆக இருந்த தொற்றிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் இப்போது 87.76 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் திரு லவ் அகர்வால் மேலும் கூறினார். இதற்கிடையே டெல்லியிலும் தொற்றுச் சம்பவங்கள் குறைவதால் முடக்கநிலை தளர்த்தப்படலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில், கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் மே 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். "புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு மே 24ஆம் தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்கள் துணையோடு ஏற்கெனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை தொடரும்," என்று டுவிட்டர் பதிவில் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

லஞ்சம்; லாலு விடுவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-2009 காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜார்க்கண்ட் சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் லாலு, ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 'டிஎல்எப்' குழுமத்துக்கு இரண்டு ரயில்வே திட்டங்களை ஒதுக்குவதற்கு லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த 'ஏ.பி. எக்ஸ்போர்ட்ஸ்' என்ற நிறுவனத்துக்கு டெல்லியில் உள்ள பிரம்மாண்ட பங்களாவை டிஎல்எப் நிறுவனம் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்றது. அதன் அப்போதைய சந்தை மதிப்பு 30 கோடி ரூபாயாகும். அந்த பங்களாவை லாலுவின் மகன் தேஜஸ்வி, மகள்கள் சந்தனா யாதவ், ராகினி லாலு ஆகியோர் பங்குகள் விற்பனை மூலம் வாங்கியுள்ளனர். ரயில்வே திட்டங்களை ஒதுக்கு வதற்காக, லஞ்சமாக இந்த பங்களா லாலு குடும்பத்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரித்தது. ஆனால், போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் லாலு மீதான குற்றச்சாட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.