லாரி ஓட்டுநர்களைக் கொன்று, வாகனத்துடன் சரக்குகளைக் கடத்திய கும்பல்: 12 பேருக்குத் தூக்குத் தண்டனை

லாரி ஓட்டுநர்களைக் கொன்று, வாகனத்துடன் சரக்குகளைக் கடத்திய கும்பல்: 12 பேருக்குத் தூக்குத் தண்டனை

2 mins read
6f2091ab-58e6-4ae8-a115-358b96ebe061
கொலை செய்த வழக்கில் கைதான முன்னாவை நேற்று ஓங்கோல் போலிசார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அழைத்து வந்தனர். படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

லாரி ஓட்டுநர்களையும் உதவியாளர்களையும் கொன்றுவிட்டு, வாகனத்தோடு சரக்குகளைக் கடத்தி விற்ற கும்பலைச் சேர்ந்த 12 பேருக்கு ஆந்திர மாநிலம், ஓங்கோல் அமர்வு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

அக்கும்பலைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு ஆளுக்குப் பத்தாண்டு சிறையும் இருவருக்கு ஏழாண்டு சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை-கோல்கத்தா நெடுஞ்சாலையில் அறுவர் கொல்லப்பட்டது தொடர்பான மூன்று கொலை, கடத்தல் வழக்குகளில் அவர்களுக்குத் தொடர்பிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. கொலையுண்டோரில் ராமர் சேகர், பெருமாள் சுப்பிரமணியம் என்ற இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அக்கும்பல் மீது மொத்தம் 11 கொலை வழக்குகள் சுமத்தப்பட்ட நிலையில், நான்கு வழக்குகள் போதிய சான்றுகளின்றித் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்னும் மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவர்கள் 9 மி.மீ. 'கார்பைன்' துப்பாக்கி வைத்திருந்த குற்றமும் மெய்ப்பிக்கப்பட்டது.

பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது அப்துல் சமத் எனும் முன்னா பாய் அக்கும்பலின் தலைவனாகச் செயல்பட்டான்.

அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் போலிஸ்காரர்கள் போல் வேடமிட்டு, சரக்கு வாகனங்களை வழிமறித்து, ஆவணங்களைக் கேட்பார்களாம். ஆவணங்களைக் கொண்டு வரும் ஓட்டுநர்களையும் உதவியாளர்களையும் தாக்கிக் கொன்று விட்டு, லாரியைக் காட்டுப் பகுதிக்குள் ஓட்டிச் சென்றுவிடுவார்களாம்.

2008 அக்டோபரில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த லாரி மாயமானதை அடுத்து, அக்கும்பல் அரங்கேற்றிய கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

குறிப்புச் சொற்கள்