ஆயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 4 பிரம்மாண்ட மருத்துவ மையங்கள்
மும்பை: கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சலால் தெரிவித்துள்ளார்.
கொரோனா போன்ற கிருமிகளை வெற்றி கொள்ளவேண்டுமென்றால் அந்தக் கிருமியை விட வேகமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து மாநகரங்களைக் காட்டிலும் கொரோனா இரண்டாவது அலையை மும்பை மாநகரம் வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்துள்ளது.
இந்நிலையில் மூன்றாவது அலை ஏற்படும்போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த அலை எப்போது வரும் என்று நிபுணர்கள் கணித்துள்ள காலகட்டத்துக்கும் முன்பே, அதை எதிர்கொள்ள மும்பை மாநகர நிர்வாகம் தயாராக உள்ளது என ஆணையர் இக்பால் சிங் சலால் ராய்ட்டர் செய்தி முகமையிடம் தெரிவித்ததாக 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நான்கு மிகப்பெரிய சிகிச்சை மையங்களை அமைத்து வருகிறது மும்பை மாநகர் நிர்வாகம். இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படையில் முன்னணி குழந்தை நல நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
"வயதில் சிறிய குழந்தைகளுக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாகும்போது குழந்தையின் தாயார் இல்லாமல் எப்படி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கமுடியும்? இதைக் கவனத்தில் கொண்டு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறோம். இந்த விஷயத்தில் கிருமியை விட நாம் வேகமாகச் செயல்பட வேண்டும்," என்கிறார் ஆணையர் இக்பால்சிங் சலால்.
இந்தியாவின் பணக்கார மாநிலம் என்று குறிப்பிடப்படும் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பை மாநகரம் கொரோனாவால் தொடக்கத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டது. எனினும் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது அலையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க அமைக்கப்படும் புதிய கொரோனா மையங்களில் ஒரே சமயத்தில் சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும்.
"பெரிய மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், குழந்தைநல மருத்துவருக்கான தனிப்பகுதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும். இந்தப் புதிய சிகிச்சை மையங்கள் அடுத்த மாதம் தயாராகிவிடும்.
"மூன்றாவது அலை ஏற்படுவதற்கு முன்பே மும்பை அதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டது," என்கிறார் இக்பால்சிங் சலால்.
இதற்கிடைய உத்தரப்பிரதேசத்தில் மூன்றாவது அலைக்கு முன்பே 10 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் பெற்றோருக்கும் தடுப்பூசி போடப்படும் என முதல்வர் ஆதித்யநாத் யோகி அறிவித்துள்ளார்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றோர்களுக்கு என சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோரை உரிய வகையில் தொடர்புகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்க வேண்டும் என சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பதால் மூன்றாவது அலைக்கு முன்பே பெற்றோருக்குத் தடுப்பூசி போடுவது அவசியமாகிறது. இதன்மூலம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

