அபாய கட்டத்தில் 70% நோயாளிகள்
பெங்களூரு: பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் 70 விழுக்காட்டினர் அபாய கட்டத்தில் இருப்பதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 7,680 நோயாளிகள் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் சுமார் 5,361 பேர் செயற்கை சுவாச வசதியுடன் கூடிய படுக்கைகளை நிரப்பி உள்ளனர்.
கொண்டாட்டமில்லை: பாஜக முடிவு
புதுடெல்லி: மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி நடைபெற இருந்த கொண்டாட்ட நிகழ்வுகளை பாஜக தலைமை ரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் 30ஆம் தேதியுடன் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்து ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் கொரோனாவால் ஏராளமான குடும்பங்கள் சிதைந்து போய் உள்ளதாகவும் இந்த நேரத்தில் கொண்டாட்டங்களுக்குப் பதில் மக்களுக்கான நலத்திட்டங்களை பாஜகவினர் செயல்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கேட்டுக் கொண்டுள்ளார். கடந்தாண்டும் பாஜக தலைமை இதுபோன்ற கொண்டாட்டங்களை ரத்து செய்திருந்தது.
எடியூரப்பா நீடிப்பார்: அமைச்சர் தகவல்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்பட வாய்ப்பில்லை என அம்மாநிலத்தின் சுரங்கம், நில ஆய்வியல் துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார். மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் மாற்றம் என்பது வெறும் கற்பனைச் செய்தி என்றார். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை முதல்வர் எடியூரப்பா தலைமையில்தான் பாஜக எதிர்கொள்ளும் என்றும் முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.
போலிச் செய்தியால் சிக்கல்
புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தியை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரபலங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வாரணாசியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பேசியபோது அவர்களின் சேவையைப் பாராட்டிய பிரதமர் மோடி, உணர்ச்சி வசப்பட்டுக் கண்ணீர் விட்டார். இந்தச் செய்தியை 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை முகப்புப் பக்கத்தில் வெளியிட்டதுடன் மோடியை விமர்சிக்கும் வகையில் ஒரு புகைப்படமும் இடம்பெற்றுள்ளதாக ஒரு செய்தி வெளியானது. எனினும் இது போலியான செய்தி என்பது பின்னர் தெரியவந்தது. அதற்குள் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பிரபல செய்தியாளர் ஷோபா டே உள்ளிட்ட பலர் இந்தப் போலிச் செய்தியை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்தனர்.
கரை ஒதுங்கிய 8 மனித உடல்கள்
மும்பை: மும்பை கடற்கரையில் எட்டு மனித உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவர்கள் அனைவரும் அண்மைய டவ்தே புயல் சீற்றத்தின்போது நடுக்கடலில் மூழ்கிய கப்பலில் பணியாற்றிய ஊழியர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நடுக்கடலில் சிக்கிய இரண்டு படகுகளில் இருந்து ஏராளமானோரை கடலோரக் காவல் படையினர் அண்மையில் மீட்டனர். அப்போது 11 பேருடன் இழுவைப் படகு ஒன்று மாயமானது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த போதிலும் பலனில்லை. இதற்கிடையே B305 என்ற கப்பல் மூழ்கியதை அடுத்து அதில் பணியாற்றிய 261 ஊழியர்களில் 186 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 66 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் மற்றவர்களைத் தேடும் பணி நடக்கிறது. இந்நிலையில் ரைகாட் மாவட்டக் கரையோரம் எட்டு பேரின் உடல்கள் கரை ஒதுங்கி உள்ளன.
விஷ ஊசி போடுவதாக நினைத்து ஓட்டம் பிடித்த மக்கள்
லக்னோ: கொரோனா தடுப்பூசி போடவந்த சுகாதார ஊழியர் களைப் பார்த்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிராம மக்கள் ஓட்டம் பிடித்தனர். ஒருசிலர் ஆற்றில் குதித்து தத்தளித்தனர். கிராம மக்களுக்கு விஷ ஊசி போட அதிகாரிகள் வந்துள்ளனர் என்று பரவிய வதந்தியை நம்பி கிராம மக்கள் இவ்வாறு தப்பி ஓடினர். பின்னர் அழைத்து அதிகாரிகள் விளக்கிய பிறகே ஒருசிலர் சமாதானமடைந்து ஊசி போட்டுக்கொண்டனர்.
கேரள தாதிக்கு கௌரவ குடியுரிமை
திருவனந்தபுரம்: இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான மோதலின்போது கொல்லப்பட்ட கேரளாவைச் சேர்ந்த தாதியான சௌம்யாவுக்கு இஸ்ரேல் அரசு கௌரவக் குடியுரிமை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சௌம்யா, இஸ்ரேலில் தாதியாக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு ராக்கெட் தாக்குதலில் சிக்கி அவர் அண்மையில் உயிரிழந்தார். இந்நிலையில் சௌம்யாவுக்கு இஸ்ரேல் அரசு கௌரவக் குடியுரிமை வழங்கியுள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் துணைத் தூதர் ரோயின் எத்தீதியா தெரிவித்துள்ளார்.

