10 ஆயிரம் போலிசார் சுற்றுக்காவல்; உயிர்வாயு வசதி கொண்ட படுக்கைகள் அதிகரிப்பு
புதுடெல்லி: ஊரடங்கை ஒட்டி அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் சுமார் 10 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருந்து, பால், பத்திரிகை விற்பனைக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதாக 'தினத்தந்தி' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதை அடுத்து நெடுஞ்சாலைகள், மாவட்ட இணைப்புச் சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள், 75 சிறிய மேம்பாலங்கள் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் உள்ள 408 போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை. 380 இடங்களில் வாகனப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
தேவையின்றி மாவட்டங்களைக் கடப்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். சில இடங்களில் போலிசார் எச்சரித்த பிறகும் மாவட்ட எல்லைகளைக் கடக்க முயன்றவர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
முன்களப் பணியாளர்கள், செய்தியாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டுநர்கள் மட்டும் எல்லை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர். காரணமின்றி வாகனங்களில் செல்வோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஊரடங்கின்போது பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வது குறித்து நேற்று அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதில் எந்தவித சுணக்கமும் ஏற்படக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிர்வாயு வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
13,500 கூடுதல் படுக்கைகளில் உயிர்வாயு வசதி அமைக்கும் பணிக்குத் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் சென்னையில் இருந்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை செய்துள்ளது.
சென்னையில் கார், ஆம்புலன்ஸ் சேவையை இதுவரை 12,293 பேர் பயன்படுத்திப் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு மண்டலக் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிர்வாயு வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
13,500 கூடுதல் படுக்கைகளில் உயிர்வாயு வசதி அமைக்கும் பணிக்குத் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் சென்னையில் இருந்து மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

