சென்னை: மூத்த குடிமக்களுக்குக் காவல்துறையினர் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும் என கோவை மாநகரக் காவல்துறை ஆணையர் தீபக் எம். தாமோர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நகரில் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலிசார் தங்கள் பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்களின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
"அவ்வப்போது மூத்த குடிமக்களை தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு போலிசார் பேசவேண்டும். அவர்களுக்குத் தேவைப்படும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏதேனும் கூடுதல் உதவி தேவைப்படுமா என்பதைக் கேட்டறிந்து உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்," என ஆணையர் தீபக் எம். தாமோர் அறிவுறுத்தி உள்ளார்.
தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரியும் இளையர்களையும் சமூக விரோதிகளையும் கண்டறிந்து வாகனங்களைப் பறிமுதல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பணிக்குச் செல்லும் ஊழியர்களை உரிய முறையில் விசாரித்து அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு அளிப்பவர்களைத் தடுத்து நிறுத்தாமல், அவர்களுக்கு காவல்துறை சார்பில் அடையாள அட்டைகள் வழங்கவேண்டும் என்றும் தீபக் எம். தாமோர் தெரிவித்துள்ளார்.

