செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c22b0587-b108-4e38-889b-edd1a9551057
-

மாயமான குண்டுகள் கண்டெடுப்பு

திருச்சி: காவல்துறை, துணை ராணுவப் படையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சியின்போது காணாமல் போன இரண்டு ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் இரு வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் கோவையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது இரு லாஞ்சர் குண்டுகள் காணாமல் போயின. இதுகுறித்து போலிசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் அக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

வாகனத்தை விடுவிக்க லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல்: பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்க இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல்லைச் சேர்ந்த 55 வயதான வாசு, அண்மையில் சாணார்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்திய அவர், 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் வாகனத்தை விடுவிக்க முடியும் என்றும் தாம் குறிப்பிடும் மருந்துக் கடையில் அந்தத் தொகையை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வாகனத்தில் வந்த இருவரும் இந்த உரையாடலை அவருக்குத் தெரியாமலேயே கைபேசியில் பதிவு செய்தனர். பின்னர் சமூக வலைத்தளங்களில் அந்த உரையாடல் பதிவை வெளியிட்டனர்.

50 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

சென்னை: ஹைதராபாத்தில் இருந்து மிகுந்த பாதுகாப்புடன் 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்து சென்னை வந்த டைந்தது. 10 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மருந்து நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தடைந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதையடுத்து அவை மாநிலத் தடுப்பூசி சேமிப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

கொரோனா பாதிப்பால் தாதி பலி

வேலூர்: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணியாற்றி வந்த தாதி ஒருவர் கிருமித் தொற்றால் காலமானார். 40 வயதான எழிலரசி என்ற அந்த தாதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 15ஆம் தேதி எழிலரசியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மேலும் 5 மருத்துவர் களும் 5 தாதியரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.